சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்தமருத்துவ கண்டுபிடிப்புக்கு ஆராய்ச்சியாளர்களின் குழுவை இந்தியாவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் வழிநடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சீனாவிலிருந்து மெல்ல, மெல்ல இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா வைரஸ் தன் பயணத்தை தொடங்கியது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை டார்கெட் செய்து தாக்கும் இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் சீனாவை சேர்ந்த மருத்துவர்களும், மருந்து அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் பரிதவித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த கொடூர கொரோனாவை கட்டுப்படுத்தவும், நோயாளிகளை குணப்படுத்தும் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் சயின்டிஃபிக் இண்டஸ்ட்ரியில் ரிசர்ச் ஆர்கனிஷயேசன் எனும் மருத்துவ விஞ்ஞானிகள் குழு கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அந்த ஆராய்ச்சிகளில் முதற்கட்டமாக பலத்த பாதுகாப்பு உள்ள பரிசோதனை மையத்தில் கொரோனா வைரஸ்கள் உருவாகியிருக்கின்றது. பின்னர் அந்த கொரோனா வைரஸை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ந்து அதனை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை இந்தியாவை சேர்ந்த எஸ்.எஸ்.வாசன் என்பவர்தான் தலைமை தாங்கி வழி நடத்தி கொண்டிருக்கிறார். சுமார் பதினாறு வாரங்களுக்குள் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் மருந்தை கண்டுபிடித்து மனிதர்களிடம் சோதனை செய்யும் முயற்சிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளனர்.
இந்த மருத்துவர்கள் குழுவை வழிநடத்தும் எஸ்.எஸ்.வாசன் இந்தியாவிலுள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலை கழகத்திலும், பெங்களூருவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இவர் படித்திருக்கிறார் மேலும் இவர் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.
உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை ஒரு கை பார்த்து விடுவார் இந்தியர் என்ற நம்பிக்கையோடு ஒட்டுமொத்த உலகமும் தற்போது காத்திருக்கிறது.