கொரோனா நிதி வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றி 5 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலுமணி நகரில் சுந்தரி என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்புறம் கமலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 22-ஆம் தேதி கமலா பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் உங்களுக்கு கொரோனா நிதிஉதவி வாங்கித் தருகிறேன் என்று கூறி கமலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற கமலா சுந்தரியிடமும் இதுகுறித்து தெரிவித்தார். இதனால் கமலாவை அழைத்துவந்த அந்த நபர் சுந்தரியிடமும் உங்களுக்கு கொரோனா நிதி வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பின் போட்டோ எடுப்பதற்கு நகை அணிந்து இருந்தால் நிதி கிடையாது என்று கமலா, சுந்தரியிடம் நகையை கழற்றி வைக்குமாறு அந்த நபர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுந்தரி தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றி கட்டிலில் வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் எனக்கு டீ வேண்டும் என்று சுந்தரியிடம் கேட்டுள்ளார். இதனால் சுந்தரி சமையல் அறைக்கு சென்று டீயுடன் வந்தபோது மர்ம நபர் நகையுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் கரட்டிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அந்த நபர் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும், இவர்தான் சுந்தரியின் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும் கிருஷ்ணகுமார் மீது விருதுநகர், கூகலூர், பேரூர், தொண்டாமுத்தூர் போன்ற காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் காவல்துறையினர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்ததோடு 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.