பேருந்து நிலையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றினர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகராட்சி கமிஷனரான சங்கரன் தலைமையில், மாநகர நல அலுவலரான சித்திரசேனா போன்றோரின் அறிவுரையின்படி பழைய பேருந்து நிலைய பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகாக கலை நிகழ்ச்சி கடந்த 8-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்னிசைக் கச்சேரியில் கொரோனா தொற்று பரவல் மற்றும் முன்னெச்சரிக்கையாக கையாளுவது, தொற்று பாதித்தால் சிகிச்சை பெறுவது குறித்து பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் கலை நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றியும், பரதநாட்டியத்தின் மூலமும் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பேருந்து நிலையத்திற்கு பயணிகள் கண்டு களிப்பதற்காக வந்தபோது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்து பெட்டகம், முகக் கவசம் போன்ற தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதன்பின் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.