கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் அடிப்படையில் முன்பு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு குலுக்கல் முறையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படியும் பஞ்சாப் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு பஞ்சாப் அரசின் இந்த திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.