அமெரிக்க மாகாணங்களில் கொரோனா தாகத்திற்கு இடையில் உருவாகிய சக்திவாய்ந்த புயல் மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்படைந்த உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் புதிதாக கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் இயற்கை பேரிடர்களும் அமெரிக்காவை பெருமளவு பாதித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பெரும் சக்தி வாய்ந்த புயல் கொடூரமாக தாக்கியுள்ளது. அதனால் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை இசையாஸ் என்ற பயங்கர புயல் தாக்கியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய இந்த புயல் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஓஷன் இஸ்லே கடற்கரை பகுதியில் கரையை கடந்து சென்றது. அச்சமயத்தில் மணிக்கு 136 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் கடல் அலைகள் 5 அடிக்குமேல் எழுந்து நின்றன. புயலைத் தொடர்ந்து அப்பகுதியில் மிகுந்த மழை பெய்தது. அதனால் அங்கு இருக்கின்ற நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்தப் புயல் பற்றி அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வடக்கு கரோலினாவில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருந்தாலும் வடக்கு கரோலினா மாகாணத்தின் பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வடக்கு கரோலினா மட்டுமல்லாமல் பென்சில்வேனியா, மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் போன்ற மாகாணங்களிலும் இசையாஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூறாவளி காற்றால் வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டன. அதுமட்டுமன்றி நூற்றுக்கணக்கான மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாலையில் விழுந்தன.
அதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் வாகன போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது.இந்தப் புயலால் வடக்கு கரோலினாவில் இரண்டு நபர்களும், பென்சில்வேனியாவில் இரண்டு நபர்களும், மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் மாகாணங்களில் தலா ஒருவரும் என தற்போது வரை 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புக்குழுவினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.