உலகையே அச்சுறுத்தி வரும் கருணா போர்க்களத்தில் மருத்துவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் விஞ்ஞானிகள் என பல் துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் களமாடி வருகின்றனர்.
மூன்றாம் உலகப் போர் நிகழ்வது போல் மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகை கட்டி ஆண்ட மனித இனத்தை வைரஸ் ஒன்று ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் போராடி வருகின்றனர். அதில் மருத்துவர், ஐஏஎஸ் அதிகாரி, விஞ்ஞானி என ஐந்து பெண்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன்; மத்திய சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர் கொரோனோவிற்கு எதிரான போரில் தன்னை முன்னிலைப்படுத்தி போராடி வருகிறார். சீனாவின் வுஹான் நகரத்தில் தவித்த 645 மாணவர்களை மீட்டுக் கொண்டுவந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
மருத்துவர் நிவேதா குப்தா; தொற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சியாளரான இவர் கேரளாவில் கடந்த ஆண்டு பரவிய நிஃபா வைரஸ் கட்டுப்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றியவர். டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிவேதா கொரோனா வைரஸ் தடுப்பு ஆராய்ச்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
விஞ்ஞானி ரேணு ஸ்வர்ப்; மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் இவர் நுண்ணுயிரியல் துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர். இக்கட்டான இந்த காலகட்டத்தில் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மருத்துவம் படித்தவர் பிரியா ஆபிரகாம்; புனே நகரில் உள்ள தேசிய வைராலஜியில் பணியாற்றி வரும் இவர் வேலூர் சிஎம்சியில் மருத்துவம் படித்தவர். நாடு முழுவதிலும் இருந்து ஆய்வகத்திற்கு செல்லும் கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை நான்கு மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறார்.
ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ்; தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக உள்ள இவர் தினந்தோறும் மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி சுகாதாரத் துறையை வேகமாக இயங்க வைத்து வருகிறார்.