இரண்டு நாட்களில் 5 ஆயிரம் உயிர்களை கொரோனா வைரஸ் பறித்து சென்றிருப்பது அமெரிக்காவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்நாட்டிலுள்ள 50 மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 30000 பேர் கோவிட்-19 வைரஸிற்கு இலக்காகி இருக்கின்றனர். பாதிப்பும், பலியும், நியூயார்க் நகரில் கட்டுக்கடங்காமல் உள்ளது. அங்கு ஒரே இரவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்றும் பலன் தராத நிலையில் மாநில ஆளுநர்களிடம் அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் மைக் பைன்ஸ் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனிடையே நியூயார்க் நகர நிர்வாகி மற்றும் இரண்டு மருத்துவமனைகள் மீது மாநில செவிலியர் சங்கம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. கொரோனா தடுப்பு பணி பிரிவில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கப்படவில்லை என்பது அமெரிக்க செவிலியர்களின் குற்றச்சாட்டு.
கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் கிடுகிடுவென அதிகரித்து எட்டு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. ஒரே நாளில் 2000 பேர் பலியாகி விட்டதை அடுத்து உயிரிழப்பு 42,500 தாண்டிவிட்டது. கொத்துக்கொத்தாக நேரிடும் உயிர் பலிகளை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் வல்லரசு என்று அறியப்பட்ட அமெரிக்கா திணறிக் கொண்டிருக்கிறது