கன மழையினால் ஓட்டு வீடு இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சில இடங்களில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழை நீர் ஓடியது. அதுமட்டுமின்றி பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து வெண்டிபாளையம் பகுதியில் உள்ள புதிய மற்றும் பழைய ரயில்வே நுழைவு பாலம், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதன்பின் ஈரோடு வ.உ.சி. பூங்கா சேறும் சகதியுமாக இருந்ததால் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த மழையினால் சூரம்பட்டி பகுதியிலுள்ள நல்லசாமியின் ஓட்டு வீடு இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்தது. இதற்கு முன்பாக அந்த வீட்டில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ், முன்சி, அணில், ராஜிவ் உட்பட 8 பேர் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர். இதன் காரணமாக அவர்கள் உயிர் தப்பினர்.