ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சந்தைக் கோடியூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வழியை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு மழைநீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.