ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான மல்லி, கிருஷ்ணன் கோவில், செண்பகத்தோப்பு, வன்னியம்பட்டி போன்ற இடங்களில் 2-வது நாளும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரியகுளம் கண்மாய் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்மாயில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இதுமட்டுமின்றி மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மொட்டைபத்தான் கண்மாய், பொன்னாங்கன்னி கண்மாய், திருவண்ணாமலை குளம், செங்குளம் கண்மாய், வடமலைகுறிச்சி கண்மாய்கள் உள்ளிட்ட பலவும் நிரம்பி வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான செண்பகத்தோப்பு, பேயானாற்று ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு தொடர் நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் வெள்ளநீர் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேற்குறிப்பிட்ட பெரியகுளம் கண்மாயில் இருந்து உபரிநீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதற்கான பிரதான சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் கரைகள் சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் வெள்ளநீர் புகுந்தது. இதனையடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புத்துறையினர் மோட்டார் மூலம் கோவிலில் புகுந்த நீரை வெளியேற்றி வந்தனர். இதனிடையில் தொடர் மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.