கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் தஞ்சை தெற்குவீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழராஜ வீதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து அய்யங்கடை தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் தெரு வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோன்று பிற சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதி அடைந்துள்ளனர். அதன்பின் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரம் கொட்டி வைக்கப்பட்டு இருப்பதால் அவை மழையில் நனைகிறது. இவ்வாறு நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடனடியாக அதை விற்க முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.