கனமழையின் காரணமாக ஏற்காடு-குப்பனூர் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. மேலும் பாறைகள் சரிந்து விழுவதால் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் தீபாவளி பண்டிகை அன்று மண் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் போக்குவரத்தானது தொடங்கியது.
இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்காடு-குப்பனூர் சாலையில் மீண்டும் பாறைகள் சரிந்து விழுந்ததோடு, மண்சரிவும் ஏற்பட்டது. இவ்வாறு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு இந்த பாதையில் வரும் சுற்றுலா பயணிகள் பயத்துடன் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனையடுத்து நெடுஞ்சாலைதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். அதேசமயம் சேலம்-ஏற்காடு பிரதான வழியில் வழக்கம்போல் போக்குவரத்தானது நடைபெற்றது.