கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் சங்க செயலாளர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மருதிபட்டி கிராமத்தில் கீழ் மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருக்கிறது. இந்த சங்கத்தில் கடந்த 2014-2019 ஆம் ஆண்டு வரை பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை தணிக்கையாளர்கள் மூலம் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வில் சங்கத்திற்கு உண்மையாக வந்த வரவு தொகைகளை குறைத்து வைத்தல், பணியாளர்கள் மேல் தனிக்கடன் வழங்கியதாக கணக்கு காட்டுதல், கட்டிடம் கட்டப்பட்டதில் நிதி முறைகேடு மற்றும் ஒரு மாதத்திற்கு 2 முறை சம்பளம் எடுத்தது என பல வகைகளில் 45 லட்சத்து 31 ஆயிரத்து 472 ரூபாய் முறைகேடு நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் மணிகண்டன், வணிக குற்றப்புலனாய்வு துறையினரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் சங்க செயலாளர் பொன்னுச்சாமி, கீழ் மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அப்போதைய எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி மற்றும் முன்னாள் சங்கத்தலைவர் பார்த்திபன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.