‘மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும்’ என்ற அற்புதமான அர்த்தம் கொண்ட கவிமணியின் இக்கூற்றை அனைவரும் அறிந்திருப்போம். பெண்களைப் போற்றி கொண்டாடுதலே நம்முடைய கலாசாரத்தின் அடிநாதம் ஆகும். பெண்ணை இன்று சிங்கப் பெண்ணாக ஒப்பிடுகையில் உணர்ச்சிப்பூர்வமாக பெருமதிப்புடன் கொண்டாடி வருகிறோம். ஆனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களையும், அவர்கள் படும் துயரங்களையும் நாம் ஏனோ மறந்து விடுகிறோம்.
சாதாரண நேரங்களில் ஆண்களைவிட அதிக வேலைசெய்துவரும் இவர்கள், மாதவிடாய் நேரங்களில் சுருண்டுபோவது இயற்கையே. பெரும்பாலான பெண்கள் இதை ஒரு தொல்லையாகவே பார்க்கிறார்கள், காரணம் மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைமைவாத கருத்துகளே, தற்போது அது ஒரு உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருந்தாலும் தனக்கு ‘பீரியட்ஸ்’ என்று சொல்வதற்கு கூச்சப்பட்டு அந்த நேரத்திலும் உழைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த நேரங்களில் உடல் வலியையும் மன அழுத்தத்தையும் சந்திக்கும் பெண்கள் மாதவிடாய்க்காக உபயோகப்படுத்தும் சாதாரண நாப்கின்களால் கூடுதலாக சில பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80 விழுக்காடு பிளாஸ்டிக் இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மக்குவதற்கு 600 முதல் 900 ஆண்டுகள் ஆகிறது. இப்படி பிளாஸ்டிக் இரசாயனம் கலந்து உருவான நாப்கின்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
உடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை காப்பாற்ற ‘Kenaf fibre’ எனப்படும், புளிச்ச கீரை தண்டில் நாப்கின் தயாரித்து அசத்தி இருக்கின்றனர் கோவையைச் சேர்ந்த பேஷன் டெக்னாலஜி மாணவர்களாக இருந்து தொழில் முனைவோருர்களான நிவேத, கௌதம்.
இவர்கள் கல்லூரியில் ஒரு ஆய்விற்காக புளிச்ச கீரை விவசாயம் செய்யும் விவசாயிகளை சந்தித்துள்ளனர். அப்போது இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்படும், அதன் தண்டுகள் வீணாய்போவதாக விவசாயிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால் எந்த நாரில் என்ன உடை நெய்யலாம் என யோசித்து புளிச்ச கீரை தண்டிலிருந்து நாரினை எடுத்து அதைத் துணியாக்கி ஆடை வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து நாப்கின் வடிவமைப்பாளர் நிவேதா கூறுகையில், ‘இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மக்கக் கூடியது. புளிச்ச கீரை தண்டுகளில் இருந்து கொண்டு நார்களைப் பிரித்து எடுத்து அதன் மூலம் நாப்கின் உருவாக்கி உள்ளோம். அதை எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும், நண்பர்களுக்கும் உபயோகிக்கக் கொடுத்தோம். அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு பல மாற்றங்களை செய்த பின்னர் நாப்கின்களை விற்பனை செய்ய தொடங்கினோம்’ என்றார்.
இந்த நாப்கின் அரசு அனுமதி சான்றுடன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை செய்யப்படுகிறது. இவர்களின் இந்த முயற்சிக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளன. இந்த நாப்கினுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.