15-ற்கும் அதிகமான கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் வரத கோவில் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்ததும் மர்ம நபர் கையில் கிடைத்த காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இருப்பினும் பொதுமக்கள் அவரைப் பின் தொடர்ந்து விரட்டி சென்று மடக்கிப் பிடிக்க முயற்சி செய்த போது தரைமட்ட கிணற்றில் அவர் தவிர விழுந்துள்ளார். இதனையடுத்து கிணற்றில் தண்ணீர் இருந்ததினால் மர்ம நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனை அடுத்து கிணற்றின் கரையில் இருந்த பொதுமக்கள் அவரை மேலே வருமாறு கூறியுள்ளனர்.
பின்னர் மேலே வந்த மர்ம நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் மோகன் என்பது தெரியவந்துள்ளது. பிறகு இவர் 15-க்கும் அதிகமான கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மோகனை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.