கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஊர் தலைவரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நசரன் விளை பகுதியில் அருள்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அருள்குமார் அப்பகுதியில் ஊர் தலைவராக இருந்துள்ளார். அங்கு சந்தனமாரியம்மன் என்ற கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கொடை விழாவின் போது ஆடுகளை வெட்டுவதை வழிவழியாக அருள் குமாரின் குடும்பத்தினர் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் அந்த கோவிலில் நடைபெற்ற கொடை விழாவின் போது ஆடுகளை வெட்டுவதற்கு அருள்குமாரின் குடும்பத்தினர் தயாராக இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் வழிவழியாக ஆடுகளை நீங்கள் தான் வெட்ட வேண்டுமா நாங்கள் செய்யக் கூடாதா என்று கூறி தகராறு செய்துள்ளார்.
இதனைக் கேட்ட ஊர் பெரியவர்கள் சிலர் விக்னேஷை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த விக்னேஷ் அவர்களை அவதூறாக திட்டியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருள்குமாரின் முதுகில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த அருள்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அருள்குமாரின் மகனான பார்த்திபன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிந்த காவல்துறையினர் அருள் குமாரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.