அம்மன் கோவிலில் சிலைகள் மற்றும் சூலம் ஆகியவை சேதமடைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வாரம் தவறாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
இதனையடுத்து கோவிலில் பூஜைகள் முடித்து விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது கோவிலின் பக்கவாட்டில் இருந்த நவகிரக சன்னதி மற்றும் அம்மனுக்கு எதிரே இருந்த திரிசூலம் ஆகியவை சேதமடைந்து இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேதமடைந்த சிலைகள் மற்றும் சூலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் யாரேனும் குடிபோதையில் வந்து நவக்கிரக சிலைகள் மற்றும் சூலத்தை சேதப்படுத்தினார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.