கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் இரண்டு பேர் உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் வருவதை பார்த்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்று அதில் ஒருவரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் பிரசாந்த் என்பது தெரியவந்துள்ளது.
அதன்பின் பிரசாந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் பிரஷாந்த் அளித்த தகவலின் அடிப்படையில் தப்பிச்சென்ற பாலு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் திருடிச் சென்ற உண்டியலை மீட்டு கிராம மக்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்துவேல் முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.