Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலில் உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோவிலில் புகுந்து நகை மற்றும் வெள்ளியை  திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவிலில் தினசரி மாலை வேளையில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்றதோடு, கோவிலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்களையும் திருடியது தெரிய வந்துள்ளது.

மேலும் லாக்கரில் வைத்திருந்த கோவிலின் நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த 15 பவுன் நகை தப்பிவிட்டது. அதன்பின் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிந்திருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு அது   கோவிலில் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்து அங்கும் இங்குமாக ஓடி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனிடையில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதிகாலை சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வரும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று இந்த கோவிலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |