கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி சுப்பிரமணியன் வழக்கம் போல் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதன்பின் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.