யானை தாக்கியதால் தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாறாமலே எஸ்டேட் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீனா கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் தற்போது ஸ்ரீனா சொந்த ஊரில் இருக்கின்றார். இதனையடுத்து மணிகண்டன் வழக்கம்போல் அதிகாலை மோட்டார் சைக்கிளில் மாறாமல் டீக்கடைக்கு புறப்பட்டார். அந்த டீக்கடையின் அருகில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றதால் அதில் கலந்து கொள்வதற்காக மணிகண்டனும் மகள் ஸ்ரீனாவும் சென்றுள்ளனர். இந்நிலையில் தந்ததையும், மகளும் சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் 3 யானைகள் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் மணிகண்டன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் யானை மோட்டார்சைக்கிளை காலால் எட்டி தள்ளியதனால் தந்தையும், மகளும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் ஒரு யானை ஸ்ரீனாவை காலால் மிதித்ததில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். மேலும் இதில் மணிகண்டனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதனிடையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கூச்சலிட்டு யானைகளை துரத்தி அடித்தனர். இதனைதொடர்ந்து படுகாயமடைந்த தந்தை, மகள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.