Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம்…. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கோவிலுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும் தனி நபர்கள் சிலர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இவ்வாறு கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் நிலத்தை காலி செய்யாததால் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்படி நீதிமன்றத்தில் உத்தரவு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராமகுமார் மேற்பார்வையில் செயல் அலுவலர்கள் சிவசங்கரி, ஹரீஷ்குமார், ராஜேஷ், மணிகண்டன், பிருந்தாதேவி, ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, பிரகாஷ், கீதாபாய், கணக்கர் ஆனந்தராஜ் மற்றும் பணியாளர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றனர். அதன்பின் அங்கு தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 1,680 சதுர அடி நிலத்தை அதிகாரிகள் மீட்டதுடன் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

இதனைத்தொடர்ந்து இந்த நிலத்தை சுற்றிலும் இரும்பு கம்பியால் வேலி அமைக்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 120 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்து இருக்கின்றோம். ஆகவே எதாவது திட்டத்தின் மூலமாக வணிக வளாகம் கட்டப்படும். அதன்பின் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து இருக்கின்றோம். இந்த வழக்கில் எங்களுக்கு தீர்ப்பு சாதகமாக வந்தபின் அந்த வீடுகளும் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |