கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மே 11ம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது.
எனினும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் 200 கடைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு கடைகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் தமிழக அரசை கண்டித்து கோயம்பேட்டில் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு முடிவு எடுக்காமல் அழைக்கழிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சில்லறை வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்வதற்கென சென்னையில் மாநகராட்சி கட்டிடம் மற்றும் பூங்காக்களில் இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர். எனினும் திருமழிசை அல்லது மாதரவம் பகுதியில் சில்லறை காய்கறி விற்பனைக்கு இடம் ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அல்லது கோயம்பேடு மார்க்கெட்டை தூய்மைப்படுத்தி கிருமி நாசினிகள் தெளித்து அங்கே காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.