இந்த உலகத்தைக் காத்து ராட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமரின் அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமும் தான் ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து மக்களை காத்து அருளினார். அதோடு மகாபாரதப்போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே எல்லோரது மனதிலும் ஆனந்தத்தில் ஆழ்ந்து விடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடி எல்லோர் வாழ்விலும் சிறப்பை பெறலாம். கிருஷ்ணஜெயந்தி பூஜையை வீட்டில் எப்படி செய்வது, விரதம் இருப்பது எப்படி, என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடிமாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினோராம் தேதி தமிழகத்திலும் வட இந்தியாவில் 12-ம் தேதியும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 11 அதாவது ஆடி 27-ம் தேதி காலை 7.55 மணிக்கு அஷ்டம திதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 9.36 மணி வரை உள்ளது. கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டம திதி தொடங்கும் ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழகத்தில் கடைபிடிக்கப்படும். அதேசமயம் கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜைகளை செய்வது வழக்கம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 11-ம் தேதி காலை 7.55 மணிக்கு தொடங்குவதால் அதன்பின்பு எமகண்டம்,ராகு காலம், கூலிகை ஆகியவற்றை வைத்து எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரங்களை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.