அதர்மத்தை அடியோடு அகற்றி தர்மம் செலுத்துவதற்கும் சத்தியத்தையும் அன்பையும் நிலைத்திட செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அதர்மம் புரிவோரை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டி, அறம் தழைத்தோங்கிடச் செய்வதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில், கிருஷ்ணர் தங்கள் வீட்டிற்கு நேரில் வருவதாக மாக்கோலமிட்டு அவருக்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களைச் செய்து வைத்து, படையலிட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள். எத்தனை துன்பங்கள் வந்தாலும், கிருஷ்ணர் உடனிருந்து காத்திடுவார். பகையையும் துரோகத்தையும் எதிர்த்து வெல்ல ஆற்றலை தந்திடுவார் என்ற அவர்களின் நம்பிக்கை மெய்யாகிட இந்த நன்னாளில் வேண்டுவோம்.
இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டுவோம். இயன்றதைச் செய்து மற்றவர்களுக்கு உதவிடுவோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தெளிந்த தண்ணீரை போல, குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல் மனதை நிலைநிறுத்தி பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெறலாம் என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை நெஞ்சில் நிறுத்தி வெற்றிகளை குவிப்போம். விரைவில் அதர்மத்தை அடியோடு அகற்றி, தர்மம் செழித்திடுவதற்கும் சத்தியத்தையும் அன்பையும் நிலைத்திட செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதி ஏற்றிடுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.