கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத பச்சை மாவட்டமாக இருந்தது. இந்த நிலையில் மே4ம் தேதி 2 மூதாட்டிகளுக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் ஓசூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது இந்த 20 பேரில் 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறையினர் வழியனுப்பி வைத்தனர். மேலும் தற்போது 2 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து விரைவில் கிஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. இதுவரை, கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.