கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன.
இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் விவசாயம் பெரிய ஆபத்தில் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன. இவை வட மாநிலங்களில் இருந்ததை போல பழுப்பு நிறத்தில் இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இன்று வேளாண் அதிகாரிகள் கிருஷ்ணகிரி சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை, லோக்கல் வெட்டுக்கிளி தான் என நேரில் ஆய்வு செய்த மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் பேட்டியளித்துள்ளார். இதனிடையே நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் முளவிளை பகுதியில் வெட்டுக்கிளிகள் தொல்லை அதிகரித்துள்ளது.
தாமஸ் ஆபிரகாம் என்பவர் தோட்டத்தில் வாழை மரங்கள் சேதம் செய்த வெட்டுக்கிளிகள் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவர் மோகன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதால் வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அதிகாரிகளுடன் மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.