புத்தாண்டை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அதாவது தொழில், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் சீர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழகிரி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாஜக வெறும் காற்றடைத்த பலூன் போல தான் எப்போதும் வேண்டுமானாலும் வெடித்து விடலாம் என்று கூறி விமர்ச்சித்துள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆளும் அந்த மாநிலத்தை போலவே இனி நாட்டிலிருந்து முழுவதுமாக பாஜக அகற்றப்படும் என்று காட்டமாக பேசியுள்ளார்.