கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது.
2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இந்த கோளாறை சரிசெய்யவே ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த வாரம் தனிவிமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த வல்லுநர்கள் குழுவினர் 21ம் தேதி பராமரிப்பு பணிகளை தொடங்கினர். இதற்காக அணுஉலையில் அன்று பிற்பகல் 2 மணியிலிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து ஒருவாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மின் உற்பத்தி தொடங்கியது.