குடிநீர் கேட்டு பெண்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டில் கடந்த 8 மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் வராமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சீராக குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் அப்பாஸ் ஹில்மி, பொருளாளர் ஜாபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து முற்றுகையிட்ட பொது மக்களிடம் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து குடிநீர் வினியோகம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.