குடிநீர் வினியோகம் செய்யாததால் அதை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏரியில் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஏரி முழுமையாக நிரம்பி இருக்கின்றதால் 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதுமல்லி பகுதியிலிருந்து சிறுணமல்லி பகுதிக்கு பைப் லைன் அமைக்கும் பணிகள் இயந்திரம் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.