குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தோட்டத்து சாலை பகுதிகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் வழியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை உடனே நிறைவேற்றி தர வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி சுப்பிரமணியம் போன்ற சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு தீர்வு காணப்படும் என்று கூறியபின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.