குடிநீர் வழங்குமாறு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது.
ஆதலால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்து தருமாறு கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் செயலாளர் ஆனந்த் ஆகியோர் விரைந்து சென்று விரைவில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.