குடிநீருடன் கலந்து கழிவுநீர் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் 900 நபர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடு மற்றும் பொது இடங்களில் இருக்கும் குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து சோப்பு நுரை போன்று வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், பேரூராட்சி மேலாளர் ராஜா மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு கழிவுநீர் கலந்த குடிநீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.