இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், பின்னர் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெட் போல்சனர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி விமான நிலையத்திலிருந்து காலை 10.35 மணி முதல் மதியம் 12.15 மணி வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
முப்படை வீரர்கள், போலீசார், என்சிசி, என்எஸ்எஸ், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 48 படையினரின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் விழுப்புரம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது