மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோணாமேடு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் எழிலரசன் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் கோணாமேடு பகுதியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது எதிரில் வந்த கிரேன் மோதியதால் எழிலரசன் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே எழிலரசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எழிலரசன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் வாணியம்பாடி டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஓட்டி வந்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர்.