மனைவியை நினைத்து இலைகளினால் வடிவமைத்த இதயத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
துபாயில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் ரங்கராஜன் காந்தி என்பவர். அவரின் மனைவி, தாய், தந்தை என அனைவரும் இந்தியாவில் உள்ளதால் ரமேஷின் நினைவுகளும் இந்தியாவிலேயே உள்ளது. இதற்குச் சான்றுதான் அவர் உருவாக்கிய காய்ந்த இலைகளினால் ஆன இதயம். வழக்கம் போல் சாலையோரங்களில் இருந்த காய்ந்த இலைகளை சேகரித்து அள்ளிக்கொண்டு தன் பணியில் செயல்பட்டிருந்தார். அச்சமயம் தனது மனைவியின் நினைவு வந்ததால் காய்ந்த இலைகளை ஒன்றுசேர்த்து இதயம் போல வடிவமைத்துள்ளார். பின்பு அதைக் கூட்டி அள்ளி சென்றுவிட்டார். இருப்பினும் அவர் வரைந்த இதயத்தை யாரோ போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இது குறித்து பேசிய ரமேஷ்: அந்த இதயத்தை வரையும்போது என் மனைவியை பற்றி நினைவுகள் மட்டுமே என்னுள் இருந்தது. அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன். நான் அவளையே நினைத்துக்கொண்டு இருப்பேன் என அவளுக்கு தெரியும் என கூறியுள்ளார். அடுத்த மாதம் விடுமுறையின்போது நான் ஊருக்கு செல்வேன். என் குடும்பத்துடனும் மனைவியுடனும் நேரத்தை செலவழிப்பேன் என தெரிவித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரமேஷ் லதாவை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே மாதத்திற்குல் அவர் துபாய்க்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.