திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த அத்திக்காட்டு பிரிவு பகுதியில் உள்ள அருள்மிகு மகா பெரியசாமி திருக்கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் குலதெய்வ வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
தெலங்கானா மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்டம்,பழனி முருகன் கோவிலில் தனது மகள் வழி பேரனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து பின்னர் கார் மூலமாகப் பெருமாநல்லூர் வழியாக அத்திக்காட்டுபிரிவு வந்தடைந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் சார்பிலும் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர்,கோவிலில் தனது குடும்பத்தினர் சார்பில் நன்கொடை அளித்துக் கட்டப்பட்ட காவல் தெய்வங்களான பரிவேட்டையர்கள் சிலைகள் முன்பு குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதன்பின்னர், அங்குக் காத்திருந்த ஊர் மக்களிடையே சென்று அவர்களின் அன்பு வேண்டுகோளுகினங்கி அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்.அங்கிருந்து கார்மூலம் கோவை சென்றார். தெலுங்கானா ஆளுநர் வருகையை ஒட்டிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.