நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் மனுஸ்ரீ ஆகியோருடன் வேளாங்கண்ணிக்கு சென்று அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளான் ராமதாஸ்.
இந்த நிலையில் பன்னிரண்டாம் தேதி காலை மனுஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுதியில் இருந்து வெளியேறிய ராமதாஸ், எழிலரசி ஆகியோர் குழந்தையை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ராமதாஸ் எழிலரசி இருவரும் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டனர்.
குழந்தை உடலில் காயங்கள் இருந்ததால் இது குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தீவிர விசாரணை நடத்திய வேளாங்கண்ணி போலீசார் ராமதாஸ் எழிலரசி ஆகியோரை வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செங்கம் பகுதியை சேர்ந்த ராமதாசுக்கும் கில்லியூர் பகுதியை சேர்ந்த கணவரை இழந்தவர் ஆன எழிலரசிக்கும் ஹலோ ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு கதை பேசிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி வேளாங்கண்ணிக்கு வந்து தங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதுபோல கடந்த 11 ஆம் நாள் ராமதாஸ் எழிலரசி ஆகியோர் குழந்தை மனுஸ்ரீயுடன் வேளாங்கண்ணிக்கு வந்து விடுதியில் அறை எடுத்துத் தங்கி உள்ளனர்.
அப்போது தாங்கள் பேசுவதற்கு குழந்தை மனுஸ்ரீ இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்த ராமதாஸ் குழந்தையை கொடூரமாக தாக்கி உள்ளான். மயங்கி விழுந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறவே குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு இருவரும் தப்ப முயன்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராமதாஸ் எழிலரசி ஆகியோர் மீது வேளாங்கண்ணி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இருவரும் நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.