குழந்தை அருந்தும் பாலில் ஆபத்தான மருந்து பொருளை கலக்கிய வாலிபனுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானியாவில் ஜமர் பெய்லி என்ற 21 வயதான வாலிபன் பிறந்து மூன்று வாரங்களே ஆன பெண் குழந்தை ஒன்றிற்கு கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி பால் பாட்டிலில் மருந்து ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. அதிலும் குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அதன் தாய் அவசர உதவியை அழைத்துள்ளார். மேலும் அவர்கள் சில நிமிடங்களிலேயே விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குழந்தையின் சிறுநீரை பரிசோதனை செய்ததில் சோடியம் வால்போரேட் என்னும் வேதிப்பொருள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது கைகால் வலிப்பு மற்றும் இருமுனை கோளாறு என்று அழைக்கப்படும் ஒருவித மன தளர்ச்சியினை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இதனை கொடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மூன்று வாரங்களே ஆன குழந்தை இதனை தற்செயலாக உட்கொண்டிருக்காது என்று மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது. இதன் பின்னர் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களை தொடர்ந்து நச்சுயியல் நடத்திய சோதனையில் குழந்தையின் பால் பாட்டிலில் அந்த வேதிப்பொருள் கலந்து இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஜமர் பெய்லியின் வீட்டை துப்பறிவாளர்கள் ஆய்வு செய்ததில் சோடியம் வால்போரேட் வாங்கியதற்கான மருந்து சீட்டு ஒன்று இருந்துள்ளது.
மேலும் அவரது ஸ்மார்ட்போனில் ‘குழந்தையை கொல்வது எப்படி, எவ்வாறு விஷம் கொடுக்கலாம்’ என்று தேடியுள்ளார். அதனையும் துப்பறிவாளர்கள் கண்டுபிடித்து அதன் பின்னர் பெய்லியை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதில் அவர் மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு பெய்லிக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை குணமடைந்து தனது தாயுடன் வீட்டுக்கு திரும்பியது.