வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு நடைபெற இருந்த மூன்று திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி. குப்பம் அருகில் இருக்கக்கூடிய குறிஞ்சிநகரில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்தப் புகாரின்பேரில் நேற்றைக்கு முன்தினம் இரவு சைல்டுலைன் அணிஉறுப்பினர்கள் வெங்கடேசன், மகாலட்சுமி, மற்றும் சமூக நல அலுவலர் ராணி போன்றோர் அங்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது குடியாத்தம் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த மாணவி 18 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால் அந்தத் திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் இரு தரப்பினரிடமும் மாணவிக்கு 18 வயதிற்கு பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என்று அலுவலர்கள் எழுதி வாங்கியுள்ளனர். இதேபோன்று நேற்று முன்தினம் புலிமேடு கிராமத்தில் 18 வயது மாணவிக்கும், வேலூரை அடுத்துள்ள திருமலைகொடி கிராமத்தில் 17 வயது மாணவிக்கும் நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு மாணவிகளும் ராணிப்பேட்டையில் இருக்கின்ற குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அவர்களை மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர்.