14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கர்ப்பமான சிறுமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தகவலின் பேரில் வந்த ஊர் நல அலுவலர் வைஜெயந்தி சிறுமியிடம் விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் 14 வயது சிறுமியை கார்த்திக் என்பவர் குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஊர் நல அலுவலர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் கார்த்திக்கை குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழாக கைது செய்துள்ளனர்.