Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பு…. இவர்களின் சிறப்பான சேவை…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!

ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்து குமாரசாமி- மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2வயதில் சுகன்யா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நன்னிலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் திடீரென பழுதாகி நின்றது.இந்நிலையில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு ஏற்பட்டு துடித்ததால்  என்ன செய்வது என்று தெரியாமல் கணவன்- மனைவி இருவரும் பதறிப்போய் நின்றுள்ளனர்.

இப்போது ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார் போன்ற எந்த வாகனங்களும் இயங்காத நிலையில் மோட்டார் சைக்கிளும் பழுதாகி நின்றதால் குழந்தையை மருத்துவமனைக்கு எப்படி அழைத்து செல்வது என்று தெரியாமல் கணவன்- மனைவி இருவரும் நடுவழியில் கண்ணீருடன் நின்றுள்ளனர்.இதனையடுத்து அவ்வழியாக காரில் ரோந்து பணிக்காக சென்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் ராஜேந்திரன், திருநாவுக்கரசு, புகழேந்தி ஆகியோர் காரை நிறுத்தி நடுவழியில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த  கணவன் மனைவியிடம் விசாரித்ததில் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

அதன்பின் நேரத்தை தாமதிக்காமல் காவல்துறையினர் உடனடியாக குழந்தை மற்றும் பெற்றோரை காரில் ஏற்றிகொண்டு நன்னிலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்தது. இவ்வாறு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினர் பற்றிய தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியதால் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. எனவே காவல்துறையினரின் இந்த செயலை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் பாராட்டி இருக்கின்றார்.

Categories

Tech |