கைக்குழந்தையுடன் சாலையைக் கடந்தபோது பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தில் விநாயகத்தின் மகன் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கைக்குழந்தையாக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா கைக்குழந்தையுடன் பகல் அந்த பகுதியில் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக செதுவாலையை சேர்ந்து ஒருவர் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கைக்குழந்தையுடன் சாலையை கடக்கும்போது சரிதா மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால் சரிதாவும், அவரது குழந்தை, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என 3 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சரிதாவை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து சரிதாவின் கணவர் சுரேந்தர் கொடுத்த புகாரின்படி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.