பேருந்து நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூரை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பெரியசாமியின் குடும்பத்தினர் வெற்றிவேலுக்கு மொட்டை அடித்து சாமி கும்பிட்டு விட்டு இரவு நேரத்தில் ஊருக்கு செல்வதற்காக துறையூருக்கு பேருந்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் நாமக்கல் செல்லும் பேருந்தில் ஏறி விட்டனர்.
அதன் பின் பேருந்து தா.பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது தான் வெற்றிவேலை பேருந்து நிலையத்திலேயே தவறவிட்டது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை தேடி பார்த்துள்ளனர். அப்போது பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்கள் குழந்தையை மீட்டு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் வெற்றிவேலை மீட்டு பெரியசாமியிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டனர்.