Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்திய பெண்…. 30 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

அரசு ஆஸ்பத்திரியில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா காலனியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதியன்று ராஜலட்சுமி தஞ்சையிலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் அவர் அறையில் இருந்த ஒரு பெண் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் தான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் நீ குளித்து விட்டு வா என்று ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார். அதனை நம்பி ராஜலட்சுமி அந்த பெண்ணிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் குழந்தையே ஒரு கட்டை பையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார். அதன்பின் ராஜலட்சுமி தனது அறைக்கு வந்தபோது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவ்வேளையில் குழந்தையை அந்தப் பெண் கடத்தியது ராஜலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து குணசேகரன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் மருத்துவமனையில் குழந்தையை கடத்தி வந்த பெண் ஆட்டோவில் புதிய பேருந்து நிலையம் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரவுளிப்ரியா உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் டேவிட் உட்ரோ பிராங்க்ளின், ரவிமதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற  பெண் பட்டுக்கோட்டை அண்ணாநகர் காலனியில் இருக்கிறார் என தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். அதுமட்டுமின்றி குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பாலமுருகன் மனைவி விஜி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து ராஜலட்சுமியிடம் போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா குழந்தையை ஒப்படைத்தார். அந்த குழந்தையை பெற்றுக்கொண்ட ராஜலட்சுமி ஆனந்த கண்ணீரோடு முத்தமழையை பொழிந்தார். இவ்வாறு குழந்தையை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு கணவன்-மனைவி இருவரும் தங்களது நன்றியை  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா கூறியபோது “குழந்தை கடத்தி செல்லப்பட்ட 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டு இருக்கிறது. இதில் தனிப்படையினர் அதிவிரைவாக செயல்பட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க அந்த அரசு மருத்துவமனையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |