தெப்பக் குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீனாட்சிசுந்தரம் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தவள்ளி தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆனந்தவள்ளி எட்டையபுரத்தில் உள்ள மூத்த மகன் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்தவள்ளி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஆனந்தவள்ளியை கண்டுபிடிக்க முடியாததால் சுப்பிரமணியன் எட்டயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எட்டயபுரம் பெரிய தெப்பக் குளத்தில் பெண்ணின் உடல் கிடப்பதாக எட்டயபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பெண்ணின் உடலை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் ஆனந்தவள்ளி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் ஆனந்தவள்ளி தெப்பக் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆனந்தவள்ளியின் உடலை கைப்பற்றி எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.