குளத்தில் மிதந்த விவசாயின் சடலம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அருமை செட்டிகுளத்தில் ரத்த காயங்களுடன் 50 வயது மதிப்புடைய ஆண் ஒருவர் சடலமாக மிதந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விவசாயியான ஜெயராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் பூதாமூரில் தனது நண்பர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றதும் பின் வீடு திரும்பாததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயராஜின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயராஜை எவரேனும் அடித்துக்கொலை செய்து குளத்தில் வீசி விட்டு சென்று இருப்பார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.