விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பெலிக்ஸ் – ரோஸி. இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் மைக்கேல் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மைக்கேல் வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல் குளத்தில் தவறி விழுந்தான். இதைப் பார்த்த உறவினர்கள் குளத்தில் இறங்கி மைக்கேலை தேடியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர் அங்குவந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.