மனநிலை சரியில்லாத பெண் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா நகரைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம் -ரமா. இத்தம்பதியருக்கு குழந்தை உள்ளது . சண்முகம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ரமா சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரமாவை நேற்று இரவு முதல் காணவில்லை என்று அவரது கணவர் சண்முகம் அப்பகுதியில் தேடியுள்ளார். இதற்கிடையில் இன்று காலை பேரான்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தது சண்முகத்தின் மனைவி ரமா என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து சண்முகத்திற்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த சண்முகம் சம்பவ இடத்திற்கு வந்து ரமாவின் உடலை பார்த்து கதறி அழுதார். இதனையடுத்து ரமாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.